Skip to main content

முன்னாள் கைதிகள் நடத்தப்போகும் பெட்ரோல் பங்க்

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
pe

 

ஏதோ ஒரு கோபத்தில் தப்பு செய்துவிட்டு தண்டனை பெற்றுவிட்டு சிறைக்கு போய்விட்டு வந்தாலே இந்த சமூகம் அவரை ஒதுக்கிவைத்துவிடுகிறது. இதனால் அந்நபர் வேலைக்கு கூட செல்ல முடியாமல் அக்குடும்பமே தள்ளாடும் நிலைக்கு வந்துவிடுகிறது. தமிழகத்தில் இப்படி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பொது சமூகத்தின் பார்வை சிறைக்கு சென்றவர்களை குற்றவாளியாகவே பார்க்கிறது. குற்றம் செய்தவர்கள், திருந்தி வாழ நினைத்தாலும் சமூகத்தின் ஒதுக்கலால் மீண்டும் குற்றவாழ்க்கையை தொடங்கிவிடுகிறார்கள்.

 

இதனை போக்க வேண்டும் என்பது சமூக செயல்பாட்டார்களின் நீண்டநாள் கோரிக்கை. அந்த கோரிக்கையை மிக தாமதமாக தான் தமிழக அரசு உணர்ந்தது. அதன்படி தமிழகத்தில் தண்டனை முடிந்து வெளிவரும் சிறைக்கைதிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் பொருட்டு சென்னை, வேலூர், புதுக்கோட்டை, பாளையங்கோட்டை மத்திய சிறை அருகே சிறைத்துறை மூலமாக பெட்ரோல் பங்க் வைத்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

 


அதன்படி வேலூர் மத்திய சிறை வளாகம் அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் சேர்ந்து புதியதாக பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது வேலூர் மத்திய சிறை நிர்வாகம். இதற்கான ஜீ.எஸ்.டி எண், வருவாய்த்துறை அனுமதி, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று போன்றவற்றை வாங்கினர். செப்டம்பர் 6ந்தேதி மாலை வேலூர் மண்டல சிறைத்துறை தலைவர் ஜெயபாரதி தலைமையில் அதிகாரிகள் கலந்துக்கொள்ள பெட்ரோல் பங்க்குக்கான பூமி பூஜை போடப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் சிறை மீண்டவர்களுக்காக முதன் முதலாக வேலூரில் பெட்ரோல் பங்க்கு அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் என 9 இடங்களில் மத்திய சிறையும், 95 துணை சிறைகளும், மொத்தமாக 138 சிறைச்சாலைகள் உள்ளன. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


 

சார்ந்த செய்திகள்