எடப்பாடியில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காவல் நிலையத்தில் இரவு காவலராக ராமச்சந்திரன் என்பவர் இருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் திடீரென காவல் நிலைய வளாகத்தில் புகையுடன் சத்தம் கேட்டதால் வெளியே ஓடிவந்த காவலர் ராமச்சந்திரன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டு அதிர்ந்தார்.
உடனடியாக எடப்பாடி காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பழைய எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஆதி என்கின்ற ஆதித்யா என்ற 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். இவருடைய தந்தை கட்டபிரபு என்பதும், இவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது. எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.