கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணியின் முப்படைகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி மக்கள் படை , ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பா.ம.க இளைஞர் அணி தலைவர்

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்,"பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களின் அத்தியாவசிய தேவைகளான கல்வி, சுகாதாரத்தை இலவசமாக தருவோம். விவசாயம் செழிக்க இலவசமாக விவசாய இடுபொருட்கள் வேலைவாய்ப்பு, நீர் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவோம். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் போன்றவைகளை தி.மு.க - காங்கிரஸ் கொண்டு வந்து விட்டு தற்போது போராடுவது போல நாடகமாடுகிறார்கள்" என்றார்..
பின்னர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த அவர்,

"காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக கோரிக்கை கோரிக்கை வைத்து வந்தது. இக்கோரிக்கையை ஏற்று தமிழக அரசு காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மட்டும் இல்லாமல், அதற்கான அரசாணை வெளியிட்டு சட்டம் கொண்டுவந்துள்ளது. சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றும் போது, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. வெளிநடப்பு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் கண்டிக்கின்றனர். மேலும் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்து அழிக்க நினைத்த திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னர் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தது விவசாயிகளுக்கு துரோகம். கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்திட்டு, முதன்முதலாக பிள்ளையார் சுழி போட்டது திமுகதான்.
வளர்ச்சி மற்றும் தொழில் உற்பத்திக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் செயல்படாது. அதேசமயம் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் எதிர்ப்போம்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

மேலும் கடலூர் மாவட்ட மக்களுக்கு பயன்தராத, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்காத, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்.எல்சி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும்" என்றார். மேலும் அதிக வருவாய் கொண்ட விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கூட்டத்தில் பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, இணைப்பொதுச்செயலாளர் இசக்கி, மாநில அமைப்புச்செயலாளர் செல்வகுமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் அசோக்குமார், மகளிர் சங்க செயலாளர் மருத்துவர் தமிழரசி ஆதிமூலம், துணைப் பொதுச்செயலாளர் சன். முத்துகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், நெடுஞ்செழியன், சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.