கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் உள்ளது மல்லாபுரம். இந்தப் பகுதியில் வனப்பகுதிக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன. இங்கு மயில்கள், காட்டுக்கோழிகள், மான்கள், காட்டுப் பன்றிகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தானியங்களை சாப்பிடுவதற்காக காட்டுப்பகுதியை விட்டு ஓரம் உள்ள விவசாயிகளின் விளை நிலங்களைத் தேடி காட்டைவிட்டு வெளியே வருவது வழக்கம். அப்படி வரும் வன விலங்குகள் விவசாயிகளின் பம்புசெட்டு மோட்டார்களில் இருந்து பாய்ச்சப்படும் தண்ணீரை குடிப்பது வழக்கம்.
தங்களது விளை நிலங்களில் உள்ள விவசாய பயிர்களை நாசம் செய்வதாக கருதும் விவசாயிகள் குருணை மருந்து கலந்து தங்களது வயல் வெளி ஓரம் தூவி விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மல்லாபுரம் காப்புக்காடு பகுதி அருகில் உள்ள மக்காச்சோள வயல் அருகில் நேற்று முன்தினம் 11 மயில்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இறந்து கிடந்தன. இதை கண்ட அப்பகுதி மக்கள் அது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி வனச்சரகர் கோவிந்தராஜ் தலைமையில் வனவர்கள் முருகன், ராம்குமார், சதீஷ்குமார் ஆகிய வனத்துறையினர் மயில்கள் இறந்து கிடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றி கால்நடை மருத்துவரை வரவழைத்து அவர்களை பிரே பரிசோதனை செய்தனர்.
வயல் வெளி பகுதியில் கிடந்த குருணை மருந்தை தின்ற காரணத்தினால் மயில்கள் இறந்து போனதாக மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயிகள் தர்மலிங்கம், சுப்பிரமணியன் உள்ளிட்டோரிடம் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் 2 பேரும் தங்களது வயல் வரப்புகளில் குருணை மருந்து தூவி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இது சம்பந்தமாக மேலும் அவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.