சமீபத்தில் சித்த மருத்துவர் சர்மிகா தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், சர்மிகாவின் கருத்துக்களுக்கு ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளதாவது, ''ஒரு ஊட்டச்சத்து நிபுணராக மருத்துவர் சர்மிகாவிற்கு என்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். அபத்தமான விஷயங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் சொல்வதற்கு அறிவியல்பூர்வமான எந்தவித நம்பகத்தன்மையையும் இல்லை. எடுத்துக்காட்டாக குலோப் ஜாமுன் சாப்பிட்டால் ஹெல்தியாக உடல் எடையை அதிகரிக்கலாம் என சொல்லியுள்ளார். நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என்பதைப் போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் வீடியோவில் வெளியிட்ட இதுபோன்ற கருத்துக்களுக்கு அறிவியல்பூர்வமான நம்பகத்தன்மை இல்லை என்று கேள்விகேட்டால் அதற்கு அவர் 'ஒரு ஃப்ளோவில் சொல்லிவிட்டேன்' என்று சொல்கிறார். ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் அவர் இப்படி பேசக்கூடாது. அழகு நிலையத்தில் ஒரு தவறு நேரலாம், ஆனால் ஒரு மருத்துவமனையை நடத்தும் மருத்துவர் 'சாரி நான் ஒரு ஃப்ளோவில் மருந்தை எழுதி விட்டேன், ஒரு மருத்துவக் குறிப்பை சொல்லிவிட்டேன்' என சொன்னால் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மக்களுடைய ஆரோக்கியத்தில் அவ்வளவு அலட்சியமாக இருக்கக் கூடாது அல்லவா.
அவர்களுடைய டெய்சி மருத்துவமனையையும், சித்தா மருந்துகளையும் ப்ரொமோட் செய்வதற்காக மக்களை வருவாய் உருவாக்கும் இயந்திரங்களாக பயன்படுத்தி இருக்கக் கூடாது. சில சித்தா, ஹோமியோபதி மருந்துகளில் ஸ்டீராய்டு கலக்கிறார்கள். அதனால் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் சித்தா, ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளாக இருக்கட்டும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் சாப்பிடுகின்ற மருந்துகள் நல்ல மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளாக இருக்க வேண்டும். மற்றவை எல்லாம் உடல் நலத்திற்கு மிகவும் ஆபத்தானது. அவர் அவருடைய மருத்துவமனையையும், அவரது சித்தா மருந்துகளையும் விளம்பரப்படுத்துவதற்கு தவறான மருந்துகளை சொல்லிவிட்டு பிறகு தவறாகச் சொல்லிவிட்டேன் என சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல'' என தெரிவித்துள்ளார்.