தமிழகத்தில் சில தினங்களாகவே கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,155லிருந்து அதிகரித்து 1,489 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட அதிகம். தமிழகத்தில் 1,470 பேருக்கும், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வந்த 19 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,03,607 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 682 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 589 என்று இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை கடற்கரைக்கு செல்ல நாளை முதல் பொதுமக்களுக்கு தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நடைபயிற்சி செய்வோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். கரோனா பரவல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை கடற்கரை மணல் பரப்பில் மக்களுக்கு அனுமதி இல்லை. பிரத்தியேக நடைபாதையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.