வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 180 இடங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இத்தகைய சூழலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். தடையற்ற குடிநீர் வழங்க போதுமான ஜெனரேட்டர்களையும் வைத்திருக்க வேண்டும். தங்கு தடையின்றி ஆவின் பால் பொருட்களின் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். முன்கூட்டியே மக்களை அங்குத் தங்க வைக்க வேண்டும். முக்கிய பொருட்கள், ஆவணங்களை நீர் புகார் வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
கனமழை எச்சரிக்கை இருப்பதால் பொதுமக்கள் சுற்றுலாத் தலங்கள், நீர் நிலைகளுக்குச் செல்ல வேண்டாம். மின் உற்பத்தி, மின் விநியோகம் சீராக இருக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மழையளவு, அணைகளின் நீர்வரத்தைக் கண்காணித்து நீர் மேலாண்மை செய்ய வேண்டும். சாலைப் பணிகள் நடக்கும் இடங்களில் ஒளிரும் பட்டைகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும்” என பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். மேலும் கனமழை காரணமாக நாளை (15.10.2024) முதல் 3 நாட்களுக்கு ( 17.10.2024 வரை) கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கார்களை மேம்பாலத்தில் கார் உரிமையாளர்கள் பார்க் செய்யத் தொடங்கி இருந்தனர். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் காரை உடனடியாக அங்கிருந்து எடுக்கும்படி போக்குவரத்துப் போலீசார் கார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினர். இதனை ஏற்க மறுத்த கார் உரிமையாளர்கள் கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்த மறுத்துவிட்டனர். இதனையடுத்து அங்கு நிறுத்தப்பட்ட கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். அதே போன்று பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் நிறுத்தப்பட்ட கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். அதாவது வேளச்சேரி மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களுக்கு, நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் எனக் கணக்கிட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.