மனிதனை தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் அவைகளுக்கான உணவை அவைகளே தேடி எடுத்துக் கொள்கிறது. மனிதன்தான் தனக்கு தேவையான உணவை சமைத்து உண்கிறான். விலங்குகள், பூச்சிகள், பறவைகள் என எல்லாமே அவர்கள் இருக்கும் இடத்தில் உணவைத்தேடி செல்கிறது.
அப்படிதான் இந்தியாவின் தேசிய பறவையான மயில்கள் காட்டுப்பகுதியில் தங்களுக்கு தேவையான உணவை தேடிப் போய் எடுத்து பகிர்ந்து கொள்கிறது. தற்போதெல்லாம் மயில்கள் விவசாயம் செய்யும் காட்டுப்பகுதியை நோக்கி வரத் தொடங்கியிருக்கிறது. மேலும் மயில்களின் இனப்பெருக்கமும் சமீப காலத்தில் மிகவும் அதிகரித்து வருவதாகவும் வனத்துறையினர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் மயில்கள் விவசாய நிலங்களில் காணப்படுகிறது. அப்படித்தான் கோபிசெட்டிபாளையம் விவசாய பகுதிகளில் மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து உணவை தேடி சாப்பிடுகிறது. அப்படி மயில்கள் சாப்பிடும் அந்த உணவு என்பது விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் என்பது தான்.
கரும்பு, ராகி, சோளம், மஞ்சள் மற்றும் காய்கறி பயிர்களையும் விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் பயிரிட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட பயிர்களை தான் இந்த மயில்கள் நாசம் செய்கிறது என்பது விவசாயிகளின் வேதனை குரலாக உள்ளது.
இதில் பாதிக்கப்படும் சில விவசாயிகள் இந்த மயில்களை கட்டுப்படுத்த வேறு வழி தெரியாமல் விஷம் வைத்துவிடுகிறார்கள். இதில் ஏராளமான மயில்கள் விஷத்தால் இறந்து போகிறது. அப்படித்தான் சென்ற ஒரு வாரமாக தூக்கநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஏராளமான மயில்கள் செத்து விழுந்தது. இதை அப்பகுதி வனத்துறையினர் இறந்த மயில்களை பறிமுதல் செய்து அவற்றை உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
பரிசோதனை முடிவில் விஷத்தால் தான் மயில்கள் இறந்தது என தெரியவந்தால் விஷம் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என வனத்துறையினர் கூறியுள்ளார்கள்.
இது ஒருபுறமிருக்க "நாங்கள் விளைவிக்கும் பயிர்களை காப்பாற்றுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மயில்கள் எண்ணிக்கை மிகவும் கூடி உள்ளது. இதை வனத்துறை தடுக்கவில்லை. விவசாய நிலங்களில் மயில்கள் வராமல் செய்யவேண்டியது வனத்துறையினர் தானே" என வேதனையோடு கூறுகிறார்கள் பாதிக்கப்படும் விவசாயிகள். உணவுக்காக விஷம் வைக்கப்பட்ட பயிர்களை சாப்பிடும் மயில்களுக்கு இது விவசாய நிலம் என்று தெரியுமா?