தமிழகத்தில் இலவசப் பட்டாக்கள் வழங்கியது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இலவச வீட்டு மனையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (23/12/2020) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அவரது மகன் அரசு மருத்துவராகவும் பணியாற்றி வருகின்றனர். அரசு ஊழியர் என்பதை மறைத்து அரசின் இலவசப் பட்டாவைப் பெற்றுள்ளதாக வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், இலவசப் பட்டாக்கள் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலேயே வழங்கப்படுகின்றன. இலவசப் பட்டாக்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுகிறது என்றனர். மேலும், மனுதாரர் ராஜாவின் மகனுக்குத் தெரியாமல் அவரது பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் இலவசப் பட்டாக்கள் வழங்கியது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இலவசப் பட்டாக்கள் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பின் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், வழக்கிலிருந்து இருந்து விடுவிக்குமாறு மனுதாரரின் மகன் அளித்த மனுவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.