மதுரை அருகே உள்ள திருமங்கலம் ரயில் நிறுத்தத்தில் சிக்னல் கோளாறு ஏற்படுத்துள்ளது. இருப்பினும் அந்த ரயில்வே ஸ்டேஷனின் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார் மதுரையிலிருந்து நெல்லை நோக்கி செல்லும் ரயிலை அந்த வழித்தடத்தில் செல்ல அனுமதித்திருக்கிறார்.
அதேவேளையில் அந்த ரயில் தடத்தில் சிக்னல் கோளாறு இருப்பதாகவும், அந்த வழித்தடத்தில் வேறு ரயில்களை அனுமதிக்க வேண்டாம் என கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங் மீனாவுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிவசிங் மீனாவிற்கோ ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார் தமிழில் கூறியது புரியவில்லை.
அந்த நேரத்தில் செங்கோட்டையிலிருந்து மதுரை நோக்கிவந்த பயணிகள் ரயில் கள்ளிக்குடி வந்துள்ளது. அந்த ரயிலை அனுப்புமாறு திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் கூறியதாக நினைத்து அந்த ரயில் தடத்தில் செங்கோட்டையிலிருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலை அனுப்பியுள்ளார் சிவாசிங் மீனா.
சிவசிங் மீனாவிடம் தொலைபேசியில் பேசும்போது அவர் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதை யோசித்து பார்த்து சுதாரித்து கொண்ட திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார் கள்ளிக்குடி கேட் கீப்பரை தொடர்புகொண்டு தகவலை கூறியுள்ளார்.
அப்போது சற்றுமுன்புதான் அந்த ரயில் மதுரை நோக்கி சென்றது என கேட் கீப்பர் கூற அதிர்ந்த ஜெயக்குமார் திருப்பரங்குன்றம் ரயில் நிலைய அதிகாரியை தொடர்புகொண்டு இரண்டு ரயிலையும் நிறுத்த சொல்லியுள்ளார். இதனால் ஒரே தடத்தில் இரு ரயிலும் எதிரெதிரே நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் இந்த சம்பவத்தில் திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், மொழி தெரியாமல் தவறிழைத்த கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங் மீனா ஆகியோரை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.