நாகையில் பரோட்டா கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்கொலைக்குத் தூண்டியதாக பாஜக நிர்வாகி ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் மாவட்டம் இருளப்புரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன் (35). இவர் அந்த பகுதியில் பரோட்டா கடை நடத்தி வந்த நிலையில் நேற்று அவருடைய ஹோட்டலில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த சுசீந்திரம் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ராதாகிருஷ்ணனின் தாயார் சுசீந்திரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் எனக்கு ஐந்து மகள்கள் ஒரே ஒரு மகன் அவர் ராதாகிருஷ்ணன். 5 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்த ராதாகிருஷ்ணன் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். தொடர்ந்து கடனாளியாக இருந்த எனது மகன் குடும்ப சொத்தை விற்க முயன்றார். ஆனால் எனது கணவரின் உறவினர்கள் சொத்தை விற்க முடியாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தொடர்ந்து அவர்கள் கொடுத்த தொல்லையால் என் மகன் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடத்தியதில் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. அந்த கடிதத்தில் 'தனது சாவுக்கு பாஜக நிர்வாகியான ரமேஷ், பாலாஜி, பாஸ்கர், கண்ணன் ஆகிய ஐந்து பேரே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவின் ராஜாமங்கலம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.