இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 15 நாட்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த சூழலில் கோவை மாவட்டம் உக்கடத்தில் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக கடந்த 24 ஆம் தேதி அனைத்து ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது அங்கிருந்த பாலத்தில் பாலஸ்தீன கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலத்தில் பாலஸ்தீன கொடி பறக்கவிட்ட சம்பவத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாஹிர், ரபீக் ஜமாத்தே, இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பை சேர்ந்த சபீர் அலி என 3 நபர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.