புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையம் ஒன்றில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல் செயல்பட்டு வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் வரை கமிசனாக கொடுக்க வேண்டியுள்ளது. கமிஷன் கொடுக்க மறுத்தால் நெல் கொள்முதலை நிறுத்துவது வழக்கமான குற்றச்சாட்டுகளாக உள்ளது. அதே போல அரசியல்வாதிகளும் கமிஷனுக்காக கொள்முதல் நிலையங்களை கொண்டு வருவதும் வழக்கம். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள பரப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கமிஷன் இல்லை; விவசாயிகளின் நெல் மட்டுமே கொள்முதல்; அரசியல்வாதிகளுக்கு இடமில்லை; வரிசைப்படி கொள்முதல்; யாருக்கும் முன்னுரிமை கிடையாது; வியாபாரிகளின் நெல் கொள்முதல் இல்லை என விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் நெல் கொள்முதல் சங்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க 4 கண்காணிப்பு கேமராக்களை வைத்து ‘நீரிணை பயன்படுத்துவோர் சங்கமே’ சிறப்பாக நடத்தி வருகிறது.