Skip to main content

கடன் செயலியால் பறிபோன இளைஞரின் உயிர்! 

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

online lone app youngster passed away in chennai

 

கடன் செயலி மூலம் கடன் பெற்ற சென்னையைச் சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர், மன உளைச்சலின் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை, கே.கே. நகரைச் சேர்ந்தவர் நரேந்திரன். இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். இவர், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீடு திரும்பி பார்த்தபோது நரேந்திரன் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனைக் கண்டு பதறிய அவரது பெற்றோர்கள் உடனடியாக கே.கே. நகர் காவல்நிலையத்திற்கு தகவல் சொல்லியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் நரேந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 

முதற்கட்ட விசாரணையில், நரேந்திரன் ஒரு கடன் செயலி மூலம் ரூ. 33,000 கடன் பெற்றுள்ளார். இவர் அந்தப் பணத்தை முழுமையாக திருப்பி செலுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், இவர் கடன் பெற்ற அந்தச் செயலி கும்பல்  இன்னும் பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி அவரை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளது. இதனால் அவர், வேறு ஒரு செயலி மூலம் மேலும் ரூ. 50,000 பணத்தை கடன் பெற்று இந்த செயலியில் கட்டியுள்ளார். அப்படியிருந்தும் அந்தக் கும்பல் நரேந்திரனைத் தொடர்ந்து மிரட்டிவந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்தக் கடன் செயலி கும்பல், நரேந்திரன் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அவரது தோழிகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்