மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு சொந்தமான லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கடலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருவேள்விக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு எண்ணெய் கிணறு அமைந்துள்ளது. சுமார் 25 ஆண்டுகள் பழமையான இந்த எண்ணெய் கிணற்றை மீண்டும் புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபடுவதாகக் கூறி பல்வேறு இடங்களிலிருந்து ராட்சத இயந்திரங்கள் மற்றும் தளவாட சாமான்களை கடந்த சில தினங்களாக கொண்டுவத்து இறக்குகின்றனர்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், மயிலாடுதுறை மாவட்டமும் டெல்டா மாவட்டங்களில்தான் இருக்கிறது, புதிய எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு தடை உள்ளது என்றும், பழைய எண்ணை கிணற்றை சட்டத்திற்கு புறம்பாக புதுப்பிப்பதாக கூறி ராட்சத இயந்திரங்களை கொண்டுவந்து இறக்குவது முறையல்ல என மயிலாடுதுறை கல்லணை சாலையில் திருவேள்விக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புகளை சேர்ந்தவர்கள் பொதுமக்களோடு சேர்ந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"ஒ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்தும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். வேளாண் மண்டலம் என்கிற தீர்மானத்தை மதிக்காமல் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படுகிறது. இதே போக்கை தொடர்ந்து செய்துவந்தால் மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று தொடர்போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம்" என்கிறார்கள் போராட்டக்குழுவினர்.