டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டும் ஒ.என்.ஜி.சி.யின் அட்டூழியம் குறைந்திடவில்லை. குழாய் வெடித்து உடைப்பு ஏற்படுவதும், சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயமும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிவருகிறது.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே மேலப்பணையூர் கிராமத்தில் சிவக்குமார் என்பவரது விளைநிலத்தின் வழியாகச் செல்லும் ஓ.என்.ஜி.சி. குழாயில் நேற்று (30.06.2021) உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து வெளியேறிய ஆயில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்த அந்த நிலம் முழுவதுமாக பரவி பயிர் சேதமடைந்தது. இதையறிந்த விவசாயிகள் செய்வதறியாது போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்தனர். இதற்கிடையில் வேளாண்துறை அதிகாரிகளும், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், "பாதிக்கப்பட்ட மண் முழுவதும் மாற்றித் தர ஒ.என்.ஜி.சி. நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. அதோடு உரிய இழப்பீடு அவருக்கு பெற்றுத் தரப்படும்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விவசாயிகளோ, "பாதிக்கப்பட்ட விளைநிலத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்தனர். ஆனால், ஓ.என்.ஜி.சி. நிர்வாகமோ, “1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மண் முழுவதும் அகற்றிவிட்டு அந்த இடத்தில் வேறு மண் சேர்க்கப்படும். நடப்பு பருவத்திலேயே அவர் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக பணிகள் செய்து தரப்படும். பாதிப்பு வராது" என்று உறுதியளித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சிவக்குமார் கூறுகையில், “அந்தத் தொகையை 15 தினங்களுக்குள் எனக்கு வழங்கப்படும் என ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மண்ணை உடனடியாக மாற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஓ.என்.ஜி.சி. தரப்பில் உத்தரவாதமாக தெரிவித்துள்ளனர்" என்றார்.
மேலும் இதுதொடர்பாக பேசிய ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பாளர்களும், விவசாயிகளும், "எங்களைப் பொறுத்தவரை சோறுபோடுகிற மண்ணும், பெண்ணும், உசுரும் ஒன்னுதான். அதுக்கு தொடர்ந்து கடந்த ஆட்சியில் கலங்கம் உண்டாக்கினர். கடைசி நேரத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தனர். ஆனாலும் ஒ.என்.ஜி.சி. எனும் பொதுத்துறை நிர்வாகத்தின் பெயரில் பல தனியார் நிறுவனங்கள் கொள்ளைப்புறமாக நுழைய ஆயத்தமாவதும், அதை நாங்கள் போராடி தடுத்து நிறுத்துவதும் வாடிக்கையாகவே இருக்கிறது.
இது ஒறுபுறம் இருக்க, இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விளைநிலத்தின் குறுக்கே புதைக்கப்பட்ட குழாய்கள் அதற்கான ஆயுட்காலம் முடிந்து ஆங்காங்கே வெடித்து ஆயில் வெளியேறி நிலங்களைப் பாழாக்கிவருகிறது. ஒ.என்.ஜி.சி.யின் அட்டூழியம் தொடர்கதையாகிவிட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஒரு முடிவுகட்ட வேண்டும்" என்கிறார்கள்.