திருவாரூர் மாவட்டம், எருக்காட்டூர் பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். அதேநேரம் இந்தப்பகுதியைச் சுற்றிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கான குழாய்களும் குறுக்கும் நெடுக்குமாகப் பதித்துள்ளனர். அப்பகுதியில் விளைநிலங்கள் வழியாக குடும்பனார் கோயிலிலிருந்து வேளுக்குடி கிராமம் வரை எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில் விவசாயி நடராஜன் என்பவரது நிலத்தின் வழியாகச் செல்லும் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி ஒரு ஏக்கர் அளவிற்கு விளைநிலம் முழுவதும் பரவி, அந்நிலம் பொட்டல் நிலமாக்கியுள்ளது. அதில் விதைக்கப்பட்டிருந்த பச்சை பயிர் மற்றும் உளுந்து பயிர்கள் முழுவதும் சேதமாகியுள்ளன.
இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் சேதமடைந்த விளைநிலத்தைப் பார்வையிட்டனர். அப்போது அந்தக் குழாய் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமானது இல்லை எனக் கூறிவிட்டு அந்த எண்ணெய்யின் மாதிரியைச் சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். வட்டாட்சியர் நடராஜன் நிலத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இதுதொடர்பாக விவசாயி கூறுகையில் தற்போது பயிரிடப்பட்ட பயிர் வகைகள் அனைத்தும் சேதமாகி உள்ளன. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எண்ணெய் நிறுவனம் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்கிறார்.