மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கு பிறகு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக ஒரு அறிவிக்கை ஒட்டப்பட்டுள்ளது.
அதில் ‘விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து கிராமங்கள் தோறும், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாகவும், ஒலி பெருக்கி மூலமாகவும், தண்டோரா மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் மூலம் அந்த அறிவிக்கையை உளவுத்துறையினரும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பே இல்லாத சூழலில், இந்தியாவில் தடை நீட்டிப்பதும், அதுவும் கிராமங்கள் தோறும் தடை குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதும் தமிழ் ஆர்வலர்களிடையேயும் , பொதுமக்களிடையேயும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.