தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூரில் இருந்து பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பின்படி வழக்கமாக தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை தவிர்த்து 10 ஆயிரத்து 975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது.
அந்த வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் என சென்னையில் இருந்து மட்டும் 5 இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பியவர் மீண்டும் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு திரும்பி செல்ல ஏதுவாக நவம்பர் 13 ஆம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி முதல் இன்று வரை விதிமீறல், கூடுதல் கட்டணம் வசூல், பிற மாநில பதிவு உள்ளிட்டவை தொடர்பாக ஆம்னி பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 ஆயிரத்து 699 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் 1,223 ஆம்னி பேருந்துகள் விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு 18 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு 10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. முறையாக வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகளுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்ட 8 ஆம்னி பேருந்துகளையும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.