கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் மதியனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயி ரத்தினவேல் (வயது 70). இவர் வயது மூப்பு காரணமாக வட்டாட்சியருக்கு முதியோர் ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பம் செய்திருந்தார். இதற்காகப் பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று உதவித்தொகை கேட்டு முறையிட்டு வந்துள்ளார். அங்கிருந்த அதிகாரிகள் உங்களுக்கு முதியோர் உதவித்தொகை அனுமதி வழங்கப்பட்டு அந்தத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர். அதை நம்பிய ரத்தினவேல் வங்கிக்குச் சென்று பார்த்தபோது அவரது வங்கிக் கணக்கில் முதியோர் உதவித் தொகை எதுவும் வரவு வைக்கப்படவில்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரத்தினவேல் உறவினர்களிடம் இது குறித்துக் கூறியுள்ளார். அவரது உறவினர்கள் உளுந்தூர்பேட்டை சமூக நல வட்டாட்சியரிடம் சென்று விவரம் கேட்டுள்ளனர். அப்போது அலுவலக ஊழியர்கள் ரத்தினவேலின் வங்கிக் கணக்கிற்குக் கடந்த ஓராண்டுக் காலமாக முதியோர் உதவித்தொகை பணம் வரவு வைத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். பின்பு அங்குள்ள அலுவலக கணினியில் ரத்தினவேல் விபரத்தை ஆய்வு செய்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் மற்றும் அவரது உறவினர்கள் சமூக நலப் பாதுகாப்பு திட்ட அதிகாரிகளிடம் சென்று முறையிட்டுள்ளனர்.
இதற்கு உரிய பதில் கிடைக்காததால் சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள் மற்றும் அக்கிராமத்தினர், உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாகப் பதிவு செய்து அவருக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம் கிடைக்காமல் நிறுத்தியதைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக விளம்பர பேனர் வைத்தனர்.
தகவலறிந்த வட்டாட்சியர் மணிமேகலை, கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அலுவலகத்தில் நடந்த தவற்றுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ரத்தினவேலுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்ற ஆர்ப்பாட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.