சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கலந்த எண்ணெய் கலவையில் அதிக அளவில் ஃபீனால் மற்றும் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெய்யாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களாக இருக்கலாம் என தெரிய வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 'எண்ணெய் கழிவு கடலில் கசிந்ததால் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா 12,500 ரூபாயும், 6700 குடும்பங்களுக்கு தலா 7500 ரூபாயும் என் மொத்தம் 9001 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொத்தமாக 8.68 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 787 மீன்பிடி படகுகளை சரி செய்ய தலா 10,000 ரூபாய் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.