ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவின் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலச மகாலில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடங்கியது.
மேகாலயா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விஞ்ஞானி சதீஸ் சி கர்கோட்டி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி வரலெட்சுமி ஆகியோர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்களை, வாதங்களை பெறுகின்றனர்.
இந்த விசாரணை குழுவிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியன், மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர் அப்துல் சலீம், தூத்துக்குடி பேராசிரியர் பாத்திமா, வணிகர் சங்கம் ராஜா மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் இன்று தங்கள் தரப்பு மனுக்களை அளிக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தரப்பில் மூவர் குழுவிடம் மனு அளித்தனர்.
தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் ஆகியோரும் வந்துள்ளனர்.