தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அதனைக் கட்டுப்படுத்த, பரவல் சங்கிலியை உடைக்க ஊரடங்கை அறிவித்ததோடு, பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்துவருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இரண்டு வாரத்தைக் கடந்த நிலையில் இன்னும் தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் குறையவில்லை.
சில மாவட்டங்களில் எண்ணிக்கை குறைந்தாலும், பல மாவட்டங்களில் அதிகரித்தேவருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கையும் மரணிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தேவருகின்றன. கடந்த மே 21ஆம் தேதி 726 பேரும், மே 22 ஆம் தேதி 757 பேரும், மே 23ஆம் தேதி 1,006 பேரும், மே 24ஆம் தேதி 1,120 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி கடந்த இரண்டு வாரமாக உயர்ந்துகொண்டேவருகின்றன. தொற்றாளர்களின் எண்ணிக்கை எந்த நாளும் குறையவில்லை. மே 24ஆம் தேதி நிலவரப்படி 6,842 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. இதுவரை 383 பேர் இறந்துள்ளனர் எனக் கூறுகிறது. முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள, கிராமங்கள் நிறைந்த மாவட்டங்களிலும் தொற்று பரவியுள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி பரிசோதைனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையவேயில்லை என்கிறார்கள்.
கரோனா பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை பெறுபவர்களைவிட, கரோனா அறிகுறி தெரிந்துகொண்டு பரிசோதனை செய்யாமல் மருத்துவர்களை நேரடியாக சந்தித்து மருத்துவம் பார்பவர்கள் இந்த மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதனால் கரோனா நோயாளிகளின் உண்மையான எண்ணிக்கை, இறப்புகளின் எண்ணிக்கை முழுமையாக தெரியவில்லை என்கிறார்கள். கிராம அளவில் கரோனா தடுப்புக் குழுவை அமைக்க வேண்டும். அவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், திருமணம், இறப்பு போன்ற சடங்குகளில் பொதுமக்கள் அதிகளவில் கூட விடாமல் கிராமங்களில் தடுக்க வேண்டும், அதோடு கிராமங்களில் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்கள்.