குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள். பொது மக்கள் என 500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை தடுக்க முயற்சி செய்த போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டவர்களை மட்டும் கைது செய்து மாநகர பேருந்தில் அழைத்துச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட சென்னை இணை ஆணையர் தினகரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வட சென்னை இணை ஆணையர் தலைமையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.