Skip to main content

சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் சடலத்தை நெல் வயலில் தூக்கி செல்லும் அவலம்!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021
கதச


புவனகிரி அருகே உள்ள அழிச்சிகுடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் தெருவில் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது.  இந்த சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி நீண்டகாலமாக சரியில்லை.  இதனால் இறந்தவர்களின் சடலங்களை நெல்வயல்களில் இறங்கி தூக்கி செல்லும் அவலம் தொடர்ந்து வருகிறது. மேலும் கடந்த ஞாயிற்றுகிழமை இந்த பகுதியில் வசித்த பெண் ஒருவர் இறந்துள்ளார்.  சாலை வசதி சரியில்லாததால் இறந்தவரின் சடலத்தை அப்பகுதியினர் வயலில் இறங்கி தூக்கிச் சென்றனர்.எனவே இப்பகுதியில் நிரந்தரமான சுடுகாட்டுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய செயலாளர் சதானந்தம் கூறுகையில், "இதே போல் வடக்கு தெருவில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரியமேடு என்ற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பிற்பட்ட சமூக மக்கள் வசித்து வருகிறார்கள் இவர்களுக்கும் சுடுகாட்டுக்கு செல்ல சாலை இல்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.  தற்போது இந்த நிலையை பார்த்தாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிச் சடங்கின் போது நடந்த சம்பவம்; அலறியடித்து ஓட்டம் பிடித்த உறவினர்கள்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
A woman who wakes up alive during a funeral in odisha

ஒடிசா மாநிலம், பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிபாராம் பாலோ (54). இவரது மனைவி புஜ்ஜி (52). இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி வீட்டில் நடந்த சிறிய தீ விபத்தில் சிக்கிய புஜ்ஜி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, புஜ்ஜியை சிகிச்சைக்காக அங்கு இருக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, அவர்களுக்கு போதிய பணம் வசதி இல்லாத காரணத்தினால் சிகிச்சையை பாதியிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பினர். இருப்பினும், வீட்டில் இருந்தபடியே புஜ்ஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (12-02-24) இரவு தூங்கிய புஜ்ஜி, அடுத்த நாள் காலை ஆன போதும் எழுந்திருக்கவில்லை. இதனால், கணவர் சிபாராம் பாலோவும், அவர்களது உறவினர்களும் புஜ்ஜி இறந்துவிட்டதாக கருதினர். மேலும் அவர்கள் மருத்துவர்களிடம் இறப்பை உறுதி செய்யாமல் இறுதிச் சடங்கிற்காக ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து, அன்று மாலை சுடுகாட்டுக்கு புஜ்ஜியை எடுத்துச் சென்று அங்கு அவருக்கு தீ வைக்க முயன்றனர். அந்த நேரத்தில் புஜ்ஜி, திடீரென்று கண் திறந்து எழுந்தார். இதனால், அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போதுதான், புஜ்ஜி இறக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.

இதனையடுத்து, புஜ்ஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இறுதிச் சடங்கின் போது உயிருடன் பெண் எழுந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Vijayakanth's was laid to rest with the honor

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்த்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் திரைப் பிரபலங்கள் பலரும் விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். காலை முதலே, பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தற்போது தீவுத் திடலில் இருந்து தொடங்கி பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை கொண்டுவரப்பட்டது. 

அங்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இறுதிச் சடங்கில் மா. சுப்ரமணியன், தா.மோ. அன்பரசன், கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் டி.ஆர். பாலு எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பில், மறைந்த விஜயகாந்த்திற்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. அதன்பிறகு, குடும்ப முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.