Skip to main content

“எந்த ஒரு புது திட்டங்களும் இந்த ஆட்சியில் செயல்படுத்தவில்லை” -  எடப்பாடி பழனிசாமி!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
No new projects have been implemented in this regime says Edappadi Palaniswami

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4 ஆவது ஆண்டில் நேற்று (07.05.2024) அடியெடுத்து வைத்தார். இதனையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “வணக்கம், மக்களின் நம்பிக்கையையும், நல் ஆதரவையும் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றேன். 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாள் மே 7. இந்த 3 ஆண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்ன என்று தினம் தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே  சாட்சி.

திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதை விட, பயன் அடைந்த மக்கள் சொல்வதுதான் உண்மையான பாராட்டு. 3 ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் என்றால் செயல், செயல் என நிரூபித்துக் காட்டியிருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!’” எனக் குறிப்பிட்டிருந்தார்.

No new projects have been implemented in this regime says Edappadi Palaniswami

இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத, அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பயனளிக்கும் எதையும் நிறைவேற்றாத அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் நடத்துவது சொல்லாட்சியல்ல, செயலாட்சி என்று கூறியிருக்கிறார். கடந்த 36 மாதங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறியுள்ளது. போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் ஆளும் கட்சியின் சில நிர்வாகிகளே ஈடுபட்டுள்ளது தமிழகத்தை தலை குனிய வைத்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அரசு மின்கட்டண உயர்வு, வீட்டுவரி மற்றும் சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பை வரி, பால் விலை உயர்வு போன்ற பல வரி உயர்வுகளை தமிழக மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது. அரிசி, காய்கறி, வீட்டு உபயோக எண்ணெய் என்று அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்வு. மணல், ஜல்லி, சிமெண்ட், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்வு.

தமிழகத்தில் அதிமுக எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் சட்டத்தின் மாட்சிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆளும்போதெல்லாம் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களை இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் உபயோகிப்பதால் எழும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை. கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் திருட்டு, தனியாக வசித்து வரும் முதியவர்களை குறிவைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி கொள்ளையடித்தல் என்று அதிகரித்து வரும் குற்றச் செயல்களால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர். ஆளும் கட்சியின் நிர்வாகிகளால், காவல் துறை மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் மிரட்டப்படுதல்; மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்படுதல். 

No new projects have been implemented in this regime says Edappadi Palaniswami

தேர்தலின்போது பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, அரசு மற்றும் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் அதிகரிக்கும் ஜாதி, இன துவேசங்கள். வழக்கம்போல் திமுக ஆட்சியில் மின்வெட்டால் அல்லலுறும் மக்கள். 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்களை கடனாளிகளாக ஆக்கியதுதான் திமுக அரசின் சாதனை. இவ்வாறு, 36 மாத கால திமுக ஆட்சியின் வேதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

கடந்த 36 மாதங்களாக எந்த ஒரு புது திட்டங்களும் இந்த ஆட்சியில் செயல்படுத்தவில்லை. மாறாக, அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்ட, செயல்படுத்தப்பட்ட பணிகள் இந்த ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததுதான் இந்தத் திமுக அரசின் சாதனை. அதுமட்டுமல்ல, எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வந்த பல மக்கள் நலத் திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன. பல திட்டங்கள் மூடுவிழா செய்யப்பட்டன. இதுதான் இந்தத் திமுக அரசின் 3 ஆண்டு கால சாதனைகள். இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்தத் திமுக ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் படுபாதாளத்திற்கு சென்றுவிடுமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். தற்போது தமிழகத்தில் நடப்பது சொல்லாட்சியுமல்ல, செயலாட்சியுமல்ல. செயலற்ற ஆட்சி, பயனற்ற ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி என்பதை தமிழக மக்கள் விரைவில் நிரூபிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்