சபரிமலை விவகாரத்தில், மக்களின் உணர்வில் தேவையில்லாமல் எந்த ஒரு அரசும் தலையிடக் கூடாது என மத்திய கயிறு வாரியத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
கோவையில் மத்திய கயிறு வாரியத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சபரிமலை விவகாரத்தில், ஐயப்பனுக்கு எதிராக கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ள இந்த நிலை, திரிபுராவிலும், மேற்கு வங்கத்திலும் எப்படி அவர்கள் காணாமல் போனார்களோ அதே போல கேரளாவிலும் விரைவில் காணாமல் போவதற்கான அடித்தளத்தை இது அமைத்து உள்ளதாக விமர்சித்து பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கேரளாவில் குழி தோண்டி புதைக்கும் பணியை செய்து கொண்டு இருக்கும் முதன்மையானவர் நான் என்று பினராயி விஜயன் செயல்பட்டு கொண்டு இருப்பதாக கூறினார். மக்களின் உணர்வில் தேவையில்லாமல் எந்த ஒரு அரசும் தலையிடக் கூடாது என கூறிய அவர், முன்னாள் திமுக தலைவர், இந்து மதத்தில் மாற்றம் கொண்டு வந்ததாகவும் அதில் தாய்மார்களுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் என கூறிய போது பாரதிய ஜனதா கட்சியும், ஆர் எஸ் எஸ் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என கூறினார்.
அது போல நியாமான மாற்றத்திற்கு குரல் கொடுப்போம் எனவும், ஆனால் தர்மத்திற்கு மாறான சிந்தனை இந்த மண்ணில் ஒரு போதும் உயர வழிவகுக்க கூடாது என கூறினார். ஆனால் அப்படி ஒரு மாபெரும் தவறை கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்து கொண்டு இருப்பதாகவும், அதற்கான பலனை அவர்கள் விரைவில் அனுபவிப்பார்கள் என கூறினார்.