சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "நிவர் புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே நாளை கரையை கடக்கும். 36 வருவாய் மாவட்டங்களில் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள 100 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடலில் இருப்பவர்கள் அருகில் உள்ள துறைமுகத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம்.
செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது; அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். புயல் கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம். புயல் குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்; அமைதியாக இருக்க வேண்டும். அனைத்து நிவாரண முகாம்களிலும் மக்களுக்கு தடையின்றி உணவு தரப்படுகிறது. நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.