'நிவர்' புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசு, ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள 'நிவர்' புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே நாளை மாலை கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட சில மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் தொடர் கனமழை பெய்து வருவதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு வெளியேயும், மாவட்டங்களுக்கு உள்ளும் இன்று (24/11/2020) மதியம் 01.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
முதல்வர் உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசு, ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.