மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம் தவறாமல் நீதிமன்ற வளாகத்தில் ஆஜராகி வருகிறார் ஒருவர். இவர், நீதிமன்ற வளாகத்திற்குள் வந்து, காவல் வேனில் இருந்து நிர்மலாதேவி நீதிமன்றத்திற்குள் அழைத்துச்செல்லப்பட்டு, மீண்டும் காவல் வேனில் ஏறும் வரை அவரை பார்த்துக்கொண்டே இருப்பார். அங்கே செய்தி சேகரிப்பவர்களிடம், நிர்மலாதேவி வழக்கை பற்றி ஆர்வமாக விசாரித்துக்கொண்டே இருப்பார்.
இன்றைய வழக்கு விசாரணைக்கு நிர்மலாதேவி வந்தபோதும், அந்த நபர் அங்கே ஆஜராகி வழக்கம்போலவே செய்துகொண்டிருக்க, அவரை நெருங்கி விசாரித்தபோது, அவர் நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி நகர செயலாளரான அன்பழகன் என்பது தெரியவந்தது.
அன்பழகனின் இத்தகைய செயல் குறித்து அவரிடமே கேட்டபோது, ‘’நான் நிர்மலாதேவியின் தீவிர ரசிகர். அவர் மேல் எந்த குற்றமும் இல்லை. அவரைப்பற்றி வரும் செய்திகளை யெல்லாம் பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வருகிறது. நான் மட்டும் அவருக்கு ரசிகர் கிடையாது. அவரின் மீது அனுதாபம் கொண்டு என்னைப்போல் தமிழகம் முழுவதும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்’’என்றார்.