ஹைட்ரோ கார்பன் விவகாரம் டெல்டா மாவட்டங்களில் போராட்டகளமாக மாற்றிவருகிறது. விவசாயிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவுசெய்திருப்பதோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.
அதன் ஒருபகுதியாக, பி,ஆர்,பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது, என மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கிராமங்களில் நிலம்கொடா இயக்கம் துவங்கப்பட்டு பாதாதைகள் வைக்கபட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் வேதாந்த, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது என்று நிலம் கொடா இயக்கத்தை துவக்கி வைத்து அதற்கான விளம்பர பலகையை திறந்து வைத்த விவசாயிகள் மத்திய , மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்," தமிழகத்தை அழிக்க மோடி அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. நியூட்ரினோ திட்டம் மூலம் மழை பொழிவை தரும் மேற்கு தொடர்ச்சி மலையை அழிக்க துடிக்கிறது. காவிரி, முல்லைபெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழக நலனுக்கு எதிராக செயல்பகிறது.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளதின் மூலம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை உள்ளடக்கிய நாகப்பட்டினம், கோடியக்காடு வரை சுமார் 50 லட்சம் ஏக்கர் விளை நிலங்களையும், அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதியையும் வேதாந்தாவிற்கும், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களுக்கும் விற்றுள்ளதின் மூலம் ஒட்டு மொத்த தமிழகமும் போராட்டக்களமாக மாறும் என எச்சரிக்கிறேன்.
ஏற்கனவே தென் மாவட்டங்களில் சாதீய கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி மக்களின் ஒற்றுமையை சீர் குளைத்து விட்டு தூத்துக்குடியில் நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை நிறுவிய வேதாந்தா நிறுவனம் தற்போது ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்த சாதீய கலவரங்களை உருவாக்க முயற்சித்து வருகிறது. போராட்டத்தில் சமரசமின்றி ஈடுபட்டு வரும் விவசாயிகளையும் அரசியல் ரீதியாக பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. வேதாந்த நிறுவனத்தை விரட்டியடிக்கிற வகையில் விவசாயிகள் ஒன்றுபட்டு கிராமங்ள்தோறும் நிலங்கொடா இயக்கங்களை துவங்கி இருக்கிறோம்.
தமிழக அரசு ஜாதிய கலவரங்கள் அரசியல் ரீதியான பிளவுகளை உருவாக்குகின்ற வேதாந்த நிறுவனம் தமிழ்நாட்டில் காலடி பதிப்பதற்கு தடைவிதிக்கவேண்டும் . உடனடியாக வேதாந்த , ஓஎன்ஜிசி , ரிலையன்ஸ் நிறுவனங்கள் விலை நிலங்கள் அபகாிப்பதை, ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடுத்து நிறுத்துகிற வரையில் எங்கள் போராட்டம் ஓயபோவதில்லை. அதனை ஒன்றுபடுத்துகிற விதமாகதான் கிராமங்கள்தோறும் நிலம்கொடா இயக்கங்களை துவங்கி இருக்கிறோம் .
இதை அனைத்துகிராமங்களிலும் துவங்குவோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா என் உயிர் உள்ளவரை காவிாி டெல்டாவில் ஒருகுழி நிலத்தைகூட மீத்தேன் உள்ளிட்ட மாற்றுதிட்டங்களுக்கு அனுமதிக்கமாட்டேன் என்று தடைவிதித்தார். அவர் ஆட்சியை பின்பற்றுகிற எடப்பாடி பழனிச்சாமி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை விதிப்பதற்கும் ஜெயலலிதாவிற்கு நன்றிகடனாக அவர் ஆட்சி செயல்படுத்துவார் என்கிற எதிர்பார்ப்போடு இந்த போராட்ட களத்தில் ஈடுபட்டிருக்கிறோம்." என்று முடித்தார்.
.