Skip to main content

அக்டோபர் 1 முதல் பத்திரப்பதிவில் புதிய நடைமுறை; பதிவுத்துறை அதிரடி

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

New procedure in deed registration from October 1

 

பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கவும், விடுதல் இன்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதனால் அரசுக்கு வரும் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

 

எனவே காலி மனையிடங்களை ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு (புவியியல் ஆயங்கள்) புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என கடந்த வாரத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. பதியப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக சேர்த்து மோசடி பதிவு செய்யப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. எனவே இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து புதியதொரு முடிவினை பதிவுத்துறை எடுத்துள்ளது.

 

அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துகள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும். இந்த நடைமுறையானது வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் என தமிழக அரசு சார்பில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்