விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (13.12.2021) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பொதுமக்கள் தங்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வந்தனர். அப்போது அய்யனார் (68) எனும் முதியவர், மாவட்ட ஆட்சியரிடம் தனது மனுவை அளித்தார். அந்த மனுவைப் பிரித்துப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, “விழுப்புரம் அருகே உள்ள தென்பேர் என்ற கிராமத்தைச் சேர்ந்த நான் வசித்துவந்த வீடு, தீயில் எரிந்து நாசமாகிவிட்டது. இருக்க வீடு இல்லாமல் ஆங்காங்கே தங்கி வாழ்க்கை நகர்த்திவருகிறேன். வயது மூப்பின் காரணமாக காது கேட்கவில்லை; கண்பார்வையும் மங்கிவிட்டது. ஆதரவற்ற நிலையில் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி கஷ்டப்படுகிறேன்.
எனக்கு அரசு அளிக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கக் கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், நேரில் சென்று முறையிட்டும் சோர்ந்து போய்விட்டேன். இதுவரை அரசு அதிகாரிகள் எனக்கு உதவித்தொகை கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், என்னை கருணைக் கொலை செய்வதற்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு அய்யனார் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் படித்துப் பார்த்த ஆட்சியர் உட்பட அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆட்சியர், பெரியவர் அய்யனாருக்கு ஆறுதல் கூறியதோடு, விரைவில் முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கு ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆட்சியரின் வார்த்தையை நம்பிக்கையோடு கேட்டுக்கொண்டு தளர்ந்த நடையுடன் தனது ஊரை நோக்கி சென்றுகொண்டிருந்தார் பெரியவர் அய்யனார்.