நேற்று முன்தினம் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முடிவடைய இருக்கிறது. முதல்நாள் காவிரி விவகாரத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இறுதி நாளாக நடைபெற இருக்கும் கூட்டத்தொடரின் இன்றைய நாளில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்நிலையில் இன்று பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110 கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அதில், ''இன்று காலநிலை மாற்றம் தான் பெரிய பிரச்சனையாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை முன்கூட்டியே உணர்ந்து காலநிலை மாற்றம் குறித்து 1969 ஆம் ஆண்டிலேயே வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசி இருக்கிறார். உலகம் அதிகம் வெப்பமயமாவதால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால், கடல் மட்டம் உயரும் என்பதையும் 1989 ஆம் ஆண்டு டோக்கியோ மாநாட்டில் எச்சரிக்கை விடுத்தார். கலைஞர் மீது அளப்பரிய அன்பு கொண்டவர்.
கலைஞரின் மறைவின் பொழுது அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கலைஞரின் ஆட்சி எப்பொழுதும் உழவர்கள் நலம் நாடும் ஆட்சியாகவே இருந்தது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானியாக கலைஞர் திகழ்ந்தார் என்றும் பெருமைப்படுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என அழைக்கப்படும். அதேபோல் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவர்களுக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று அறிவிப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றேன்'' என்றார்.