நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தெற்கு ரத வீதியில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், சங்ககிரி அருகே உள்ள கோழிக்கால்நத்தம், திருவாண்டிப்பட்டி வடக்கு காடு பகுதியைச் சேர்ந்த தறி பட்டறை அதிபர் பாலகிருஷ்ணன் மாத சீட்டு திட்டத்தில் சேர்ந்தார்.
கடந்த 23.03.2016 முதல் மாதம் 1.25 லட்சம் ரூபாய் வீதம் தொடர்ந்து 6 மாதம் செலுத்தி வந்துள்ளார். பின்னர் 25 லட்சம் ரூபாய் சீட்டுப் பணத்தை எடுத்துள்ளார். ஆனால், சீட்டுத்திட்டம் முடிந்த நிலையில் அவர் 17.45 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. நிதி நிறுவனம் தரப்பில் பலமுறை கேட்டும் அவர் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நெருக்கடி அதிகரிக்கவே, பாலகிருஷ்ணன் கடந்த 25.06.2018ல் தான் கொடுக்க வேண்டிய தொகைக்காக காசோலை எழுதிக் கொடுத்தார். ஆனால், காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.
இதுகுறித்து நிதிநிறுவன கிளை மேலாளர் சசிகுமார், திருச்செங்கோடு விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகவேல், பாலகிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்ததோடு, பாக்கித்தொகை 17.45 லட்சம் ரூபாயை செலுத்துமாறும் தீர்ப்பு அளித்தார்.