Skip to main content

கரோனாவால் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு; நாமக்கல்லில் முதல் பலி!

Published on 31/05/2020 | Edited on 31/05/2020

 

namakkal district lorry driver incident coronavirus


நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் லாரி ஓட்டுநர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நோய்த்தொற்றுக்கு நாமக்கல் மாவட்டத்தில் இதுதான் முதல் உயிர்ப்பலி என்பதால் மாவட்ட மக்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் 77 பேருக்கு கரோனா தொற்று இருந்தது. அவர்களுக்கு நாமக்கல், சேலம் மற்றும் கரூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில், ஊரடங்கு தளர்வால் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் தங்கி வேலை செய்து வந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு வரத் தொடங்கினர். அதன்படி வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து நாமக்கல்லுக்கு வந்தவர்களில் 6 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளியைச் சேர்ந்த 44 வயதான லாரி ஓட்டுநர் ஒருவர், ஆந்திரா மாநிலத்திற்கு சரக்கேற்றி வரச் சென்றார். சரக்கேற்றிக் கொண்டு திரும்பி வரும் வழியில் திடீரென்று அவருடைய உடல்நலம் மோசமடைந்தது. தொடர்ந்து அவரால் லாரியை இயக்க முடியவில்லை. இதுகுறித்து லாரி உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் மாற்று ஓட்டுநரை அனுப்பி வைத்து, லாரியை சொந்த ஊருக்குக் கொண்டு வந்தார். 

உடல்நலம் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

 

 


அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் மூச்சுத்திணறலால் இறந்தார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு முதல்முறையாக லாரி ஓட்டுநர் பலியாகி உள்ளார். இச்சம்பவம் மாவட்ட மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்