பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் ரவுடிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கையானது கடந்த 3ஆம் தேதி (03.10.2024) தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக இந்த கொலை தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டு அதில் 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றப்பத்திரிக்கையின் படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாகப் பிரபல ரவுடி நாகேந்திரனும், ஏ2 குற்றவாளியாகச் சம்போ செந்திலும் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் இந்த வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் மொட்டை கிருஷ்ணன் மற்றும் சம்போ செந்தில் ஆகிய இருவரும் தலைமுறைகளாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நிலையில் தான் இந்த கொலை வழக்கு தொடர்பாக ரவுடி நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வாக்குமூலத்தில், “தனது மகன் அஸ்வத்தாமன் அரசியல் வளர்ச்சிக்காக ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்ததால் கொலை செய்யத் திட்டமிட்டேன். இந்த கொலை திட்டம் குறித்து என் மகன் ஆஸ்வத்தாமன் வழியாக வழக்கறிஞர் அருள் என்னிடம் கூறினார். அதற்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்பதாக உறுதி அளித்தேன். மேலும் ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலையைப் பயன்படுத்திக் கொண்டேன். தனது மகனுக்காக சிறையில் இருந்தவரை ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டினேன். அதோடு ஆதரவாளர்களையும் இது தொடர்பாக எச்சரித்தேன்” எனத் தெரிவித்துள்ளதாக காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.