கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகம் மீது சமூக விரோதிகள் நேற்று (27.10.2023) இரவு கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் செய்ததும், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். அதே சமயம் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட செய்தி வெளியானதும் கட்சி அமைப்புகளும், அணிகளும் கண்டன போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.
இதற்கிடையில் காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் ஆறு பேர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டுவதில் காவல்துறையின் நடவடிக்கை, வெளிப்படையாகவும் முனைப்பாகவும் அமைந்திருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் கட்சி அமைப்புகளும், அணிகளும் இது தொடர்பாகப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட செயலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு ஆதரவு காட்டிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.