சென்னை கொடுங்கையூர் எம்.ஆர். நகர் சந்திப்பில் உள்ள முத்தமிழ் நகர் ப்ளாக் 1 பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மெட்ரோ வாட்டர் வரவில்லை என சாலைமறியலில் ஈடுபட்டனர். பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து தண்ணீர் வராததைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் நம்மிடம் பேசும்போது, கடந்த 3 மாதங்களுக்கு மேலாகவே மெட்ரோ வாட்டர் சரியாக வருவதில்லை. பாரதி நகர் சோனல் ஆபீசில் இதுபற்றி மூன்று, நான்கு முறை சொல்லிவிட்டோம். இருப்பினும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. சிரிய லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள 800 குடும்பங்களுக்கு மேல் அவை போதாது. தினந்தோறும் இதே பிரச்சனையாக உள்ளது.
நாங்கள் சாலை மறியல் செய்கிறபோது போலீசார் சமாதானமாகப் பேசுகிறார்கள், அவர்கள் பேசுவதைக் கேட்டால் கலைந்து செல்லலாம் போலத்தான் தோன்றுகிறது. ஆனால் தண்ணீர் வரவில்லையே, அதற்கு எந்தத் தீர்வும் இல்லையே, போலீசார் சொல்லியும் கூட்டம் கலையவில்லை என்றால், அதிகாரி வருவார் அவரும் நம்பிக்கையுடன் பேசுவார், பின்னர் கலைந்து சொல்வோம். தண்ணீர் மட்டும் வராது. தண்ணீர் இல்லாமல் பெண்கள், குழந்தைகளுக்குப் பெரும் கஷ்டமாக உள்ளது. தடை இல்லாமல் தண்ணீர் வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள் என்றனர் வேதனையுடன்.