செல்போன் என்னும் அரக்கனால் இளம்பெண்கள் பாதிக்கப்படுவது மிகஅதிகமாகிவிட்டது. நவீன மாடல் கொண்ட செல்போன்களால் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின், அனுமதியின்றியே போட்டோஎடுப்பது, அந்த போட்டோக்களை வைத்து மார்பிங் செய்து தங்களின் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புவது போன்ற குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது., இதில் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதுதான் வேதனையாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள தேவம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் நந்தகுமார் என்ற 22 வயது இளைஞர். அருகே உள்ள மற்றொரு காலனியில் 10-ம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவருடன் வாட்ஸ்அப் குருப்பில் நண்பராக இருந்துவந்துள்ளார். மாணவி தனது தோழிகளுடன் எடுக்கப்பட்ட குரூப் போட்டோ ஒன்றினை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவில் உள்ள மாணவியின் படத்தை மட்டும் தனியாக எடுத்த நந்தகுமார் அந்த மாணவின் படத்தை தவறான முறையில் மார்பிங் செய்து அதை அந்த பெண்ணுக்கு அனுப்பி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததோடு தனது விருப்பப் படி நடக்க வேண்டும் இல்லையேல் மார்பிங் செய்யப்பட்ட மாணவின் ஆபாச படத்தை இணையதளம் உள்ளிட்ட அனைத்து வாட்ஸ் அப் குரூப்புகளுக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டியிருக்கிறான்.
இதனால் மனம் உடைந்த அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். பெற்றோர் அந்த இளைஞனின் குடும்பத்திடம் பேசுவோம் என அமைதிப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த மாணவி எங்கே மார்பிங் செய்யப்பட்ட போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பிவிடுவானோ என்றும் இதனால் அவமானம் ஆகிவிடுமே என்கிற அச்சத்தில் இன்று காலை வீட்டிலிருந்த மண் எண்ணெயை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதனால் மாணவி பரிதாபமாக இறந்து விட்டார். செல்போன் பயன்பாட்டால் கிராமத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவி மாணவி தற்கொலை முடிவை நாடியது அப்பகுதி கிராமங்களையே பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ளது. கொடுமுடி போலீசார் வழக்கு பதிவுசெய்து மாணவியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்த நந்தகுமாரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.