கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரேநாளில் 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் திடீரென 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தது. இதனைக் கண்ட தேயிலைத் தோட்ட ஊழியர்கள் அச்சத்தில் உறைந்தனர். ஒருபுறம் தமிழ்நாட்டில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பொழிந்துவரும் நிலையில், மறுபுறம் கேரளாவில் காலநிலை மாற்றம் காரணமாக வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்துவருகின்றன. அப்படி இடம்பெயரும் யானைக் கூட்டம் கோவை வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டப்பகுதி, குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து அச்சுறுத்தல் கொடுத்துவருகிறது. இந்நிலையில் சங்கிலிரோடு, வாகமலை, பன்னிமேடு ஆகிய இடங்களில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அச்சத்திலுள்ள அப்பகுதி மக்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.