Skip to main content

தமிழக கல்வி நிறுவனங்களை அவமானப்படுத்திய மோடி அரசு!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
anna & iit


சென்னை ஐஐடிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் சிறப்பு அந்தஸ்த்து வழங்க மறுத்த பாஜக அரசு, இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு மாண்புமிக்க பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்த்தை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

மூன்று அரசு பல்கலைக்கழகங்களுக்கும், மூன்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் சமவாய்ப்பு கொடுப்பதற்காக சென்னை ஐஐடிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் சிறப்பு அந்தஸ்த்து மறுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

அரசு கல்வி நிறுவனங்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சமவாய்ப்பு கொடுப்பதே தவறு. இந்த லட்சணத்தில், இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து கொடுத்திருப்பது அசிங்கத்திலும் அசிங்கம் என்று கல்வியாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

மாண்புமிக்க பல்கலைக்கழகங்கள் என்ற பட்டியலுக்காக பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் நியமிக்கப்பட்ட குழு எட்டு பல்கலைக்கழகங்களை தேர்வு செய்தது. அந்தப் பட்டியலில் சென்னை ஐஐடியும், அண்ணா பல்கலைக் கழகமும் இடம்பெற்றிருந்தது. அந்த எட்டு பல்கலைக்கழகங்களின் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. ஆனால், ஆறு பல்கலைக்கழகங்களை மட்டுமே மாண்புமிக்க பல்கலைக்கழகங்கள் என்று அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அவற்றில் மூன்று அரசு கல்வி நிறுவனங்களுக்கும் மூன்று தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் வாய்ப்புக் கொடுக்க திட்டமிடப்பட்டது. அதன்படியே அரசு கல்வி நிறுவனங்களில் ஐஐடி டெல்லி, ஐஐடி பம்பாய், ஐஐஎஸ்சி பெங்களூரு ஆகிய கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 

 

எல்லாம் சரிதான் என்றாலும், தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு கல்வி நிறுவனங்களும் மாண்புமிக்க என்ற அந்தஸ்த்துக்கு எல்லா வகையிலும் தகுதி வாய்ந்தவைதான். ஆனால், தனியார் நிறுவனங்களுடன் அரசு நிறுவனங்களை ஒப்பிட்டு எப்படி வாய்ப்பை நிராகரிக்கலாம். அதிகப்படியான் ஆய்வுகளை நடத்தி வெளியிட்ட நிறுவனங்கள் என்ற அடிப்படையில்தான் உலகளாவிய இத்தகைய அந்தஸ்த்து தரப்படுவது வழக்கம். அப்படிப் பார்த்தாலும் சென்னை ஐஐடி மற்ற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் எல்லா வகையிலும் மேன்மைமிக்கது என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன்.

இவராவது இப்படி கருத்துத் தெரிவித்திருக்கிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில்சொல்லவே ஆள் கிடைக்கவில்லை என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை.

இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கிற அந்தஸ்த்து தமிழகத்துக்கு கிடைக்கலையேன்ற அசிங்கம் கொஞ்சம்கூட இருக்காதா என்று கல்வியாளர்கள் வினா எழுப்புகிறார்கள்.

சார்ந்த செய்திகள்