தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக வங்கக் கடலில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதன் வேகம் அதிகரித்துள்ள நிலையில் நாளை மறுநாள் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை மோக்கா புயல் உருவானது. இன்று அதிகாலை மோக்கா புயல் மிகத் தீவிரப் புயலாக வலுவடைந்தது. இப்புயல் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து 14 ஆம் தேதி தென்கிழக்கு வங்கதேசத்தில் உள்ள காக்ஸ்பஜா மற்றும் மியான்மர் நாட்டிலுள்ள சிட்வி பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையைக் கடக்கும் முன் அதி தீவிர புயல் சற்று வலுக் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு இல்லையெனில் மிகத் தீவிரப் புயலாக கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ முதல் 160 கி.மீ வேகத்திலும் இடையிடையே 175 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயலின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புயலின் எதிரொலியால் மேற்கு வங்க மாநிலம் திகாவில் தேசிய பேரிடர் மீட்புப் படை 8 குழுக்களையும், 200 மீட்புப் பணியாளர்களையும் தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாகத் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 8 ஆவது பட்டாலியன் கூறியுள்ளார்.