கடந்த அதிமுக ஆட்சியில் தி.நகர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக சத்யா இருந்தபோது, 2016 - 17 நிதியாண்டில் மேற்கு மாம்பலம் பக்தவச்சலம் தெருவில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவழித்து எம்.எல்.ஏ நிதியில் உள் விளையாட்டரங்கம் கட்டப்பட்டது.
ஆனால், அதேபோன்றதொரு உள் விளையாட்டரங்கம் கொளத்தூர் தொகுதியில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் 33 லட்சம் மதிப்பீட்டிலேயே கட்டி முடித்துவிட்டார். இந்த இரண்டு கட்டடங்களையும் ஒப்பிட்டு, சென்னை மாநகராட்சின் எல்லைக்குள் ஒரே மாதிரியான உள் விளையாட்டரங்கம் கட்ட எப்படி இவ்வளவு பெரிய தொகை வித்தியாசம் வரும் என சந்தேகமடைந்த சமூக ஆர்வலர் அரவிந்தாக்ஷன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்திருந்தார்.
அதேபோல, தி.நகர் எம்.எல்.ஏ நிதியில் கட்டடமே கட்டாமல், 30 லட்ச ரூபாய் செலவில் மேற்கு மாம்பலம் காசிக்குளம் தெருவில் கட்டடம் கட்டியதாக மோசடிக் கணக்கு எழுதப்பட்டிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு புகார் மனுக்களின் மீதான விசாரணையின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு புகார்களின் மீதான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையை அடுத்து பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மீதான நிதி மோசடி புகார் விசாரணை கட்டத்தை எட்டியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.