மழைக்காலங்களில் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கும் போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்போது கடலூர் பகுதியில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள நீரை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த கோரிக்கையை பரிசளித்த முதல்வர் தென்பெண்ணை ஆற்றில் கரைப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆற்றின் கரையில் 16 அடி உயரத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை தரமாகவும் தொய்வின்றி விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கம்மியம் பேட்டை சாவடி அருகில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் அமைக்க முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்றும், கடலூரில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் விடுபட்ட பாதாள சாக்கடை திட்டத்தை ரூ.220 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை துணை கோட்ட பொறியாளர் வீரப்பன், உதவி கோட்ட பொறியாளர் மணிவேல், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கர்ணன், கீர்த்தனா, ஆறுமுகம், சுமதி, ரங்கநாதன், சரத் தினகரன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.