நிலக்கரி இறக்குமதியை நிறுத்தவேண்டுமென நாகூரில் மா,ஜ,க ஆர்பாட்டம் நடத்தியுள்ளது.
புதுவை மாநிலம் காரைக்காலில் "மார்க்" தனியார் துறைமுகம் இயங்கிவருகிறது. அங்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் நாகூர், பட்டினச்சேரி, பனங்குடி சுற்றுவட்டார மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிவருகின்றனர்.
துறைமுகத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பல வகை போராட்டங்களை நடத்தியுள்ளனர். நாகை எம்,எல்,ஏ தமிமுன் அன்சாரி , துறைமுக அதிகாரிகளிடமும், சட்டமன்றத்திலும் துறைமுகத்தான் நிகழும் ஆபத்துக்குறித்து பேசியிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 28 ல் நடந்த மஜக வின் 3 ஆம் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், ஏப்ரல் முதல்வாரத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைத்து, கறுப்புக் கொடியேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.
இந்தநிலையில் ஒருங்கிணைந்த நிலக்கரி இறக்குமதி எதிர்ப்புகுழுவை அமைத்து ஏப்ரல் 6 அன்று நாகூரில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராட்டத்தில் நாம் தமிழர்கட்சி சீமான், மீத்தேன் எதிர்ப்புக்கூட்டமைப்பு தலைவர் பேரா,ஜெயராமன், இயக்குனர் கெளதமன். நாகை முன்னாள் எம்,எல்,ஏ நிஜாமுதீன் உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்துகொண்டனர்.
போராட்டத்திற்கு ஆதரவாக வணிக அமைப்புகள் மதியம் 2 மணி முதல் 7 மணி வரை அரை நாள் கடையடைப்பு நடத்தி ஆதரவு அளித்தனர். A.S அலாவுதீன் பேசும்போது நாகூர் மக்கள் நிலக்கரியால் படும் அவஸ்தைகள் குறித்தும் தமிமுன் அன்சாரி MLA எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் MGKநிஜாமுதீன் பேசுகையில், "நிலக்கரி இறக்குமதி தொடர்ந்தால், அடுத்து நாங்கள் வீரியமாக களமாடுவோம் ". என்றார்.
இயக்குனர் கெளதமனோ, தமிழ் நிலத்தில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து பேசினார். மேலும் நாகூருக்கு தான் வந்தபோது நிலக்கரியால் பாதித்த மக்களின் துயரங்களை கேட்டதாக கூறி முடித்தார்.
சீமான் பேசும்போது, " மோடி அரசு தமிழக மக்களுக்கு எதிராக செய்துவருகிறது. மீத்தேன்,ஹைட்ரோகார்பன், என தமிழகத்தை சுரண்டும் திட்டங்களை தினிக்கிறது, இனியும் "மார்க்" துறைமுகம் நிலக்கரி இறக்குமதியை தொடர்ந்தால் கடுமையான போராட்டம் வெடிக்கும் "என எச்சரிக்கையோடு முடித்தார்.
பிறகு மெரினா போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ஜலீல் பேசினார்.
காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும், நியுட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவேரி டெல்டா மாவட்டங்களை "பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க வேண்டும் என ஐந்து தீர்மானங்களை கொண்டுவந்தனர்.
நிறைவாக பேசிய தமிமுன் அன்சாரியோ, "நான் சட்டமன்ற தேர்தலின் போது கூறியபடி, இதற்கான போராட்டக்களத்தை கட்சி வேறுபாடு, சாதி மத வேறுபாடின்றி இணைத்து உருவாக்கியுள்ளேன். இதில் ஒரு இடத்தில் கூட மஜக கொடியை காட்டவில்லை இதற்காக யார் போராடினாலும் அதை ஆதரிப்போம், இந்த போராட்டக்களத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் MGK நிஜாமுதீன் அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் தாங்கள் அவர் பின்னால் அணி திரள்வதாகவும், நாங்களும் களத்தில் இறங்குவோம் ".என்று கூறினார்.