25.10.2019 தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித் உடல் நான்கு நாட்கள் முயற்சிக்கு பின் இன்று அதிகாலை மீட்கப்பட்டது. இன்று காலை ஆவாரம்பட்டி பாத்திமா புதுநகர் கல்லறைக்கு குழந்தை சுஜித் எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
நான்கு நாட்களாக மண்ணுள் சிக்கித் தவித்த அந்த சின்னஞ்சிறு இதயம் மீண்டும் மண்ணுக்குள்ளேயே துயில்கொண்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து சுஜித்துக்கு இரங்கல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள இரங்களில்,
நீ எப்படியும் வந்து விடுவாய் என்றுதான் ஊன் இன்றி உறக்கம் இன்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை. மனதை தேற்றிக்கொள்கிறேன். இனி நீ கடவுளின் குழந்தை சுஜித். 85 அடியில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம்தான் என்னை தந்தை ஸ்தானத்தில் மீட்புப்பணியில் ஈடுபட வைத்தது. நான் மட்டுமல்ல இந்த உலகமே உனக்காக அழும் குரல் எனக்கு இன்னமும் ஒலிக்கிறது என தெரிவித்துள்ளார்.