நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி (07.03.2023) தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் திறன் இடைவெளியைக் குறைப்பதும், மத்திய அரசுப் பணிகளில் தமிழக மாணவர்களின் விகிதாச்சாரத்தை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியைக் கட்டணமில்லாமல் வழங்குவதும் இப்பிரிவின் முக்கிய நோக்கமாகும்.
அந்த வகையில் 2023 - 24கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு முதல்நிலை தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ. 7,500 வீதம், பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது சமீப காலமாக மத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்கத் தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சியாகும்.
இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 12 ஆம் தேதி (12.06.2023) வெளியான நிலையில், அதில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின், நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாகச் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு, இதுவரை 435 மாணவர்களுக்குத் தலா ரூ. 25,000 வீதம் 1 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் முதன்மைத் தேர்வுக்குத் தயாராவதற்கான ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி போட்டித்தேர்வு பிரிவால் நடத்தப்பட்ட மத்திய அரசின் முதல்நிலை தேர்வுக்கான உதவித்தொகை பெறுவதற்கானத் தேர்வு நடைபெற்றது. இதற்குத் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 52,225 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 32,638 மாணவர்கள் ஊக்கத்தொகைக்கான தேர்வை எழுதினர். அத்தேர்வில் தேர்வான 1000 மாணவர்களுக்கு 10 மாதத்திற்கு ரூ.7,500 வீதம் என ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக, மத்திய குடிமைப் பணித் தேர்வின் முதல்நிலை தேர்வின் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை, நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவானது கடந்த 10.09.2023 அன்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தியது. இத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி (27.09.2023) வெளியான நிலையில், இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று (14.10.2023), சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. குடிமைப் பணிகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களைச் செலவுகளின் அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் இத்திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவுக்குத் தலைமை வகித்து, மாணவர்களுக்கு முதல் மாத ஊக்கத்தொகைக்கான வரைவோலையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநருமான விக்ரம் கபூர், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தரேஷ் அகமது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.