அமைச்சர் விஜயபாஸ்கரின் செல்ல வளர்ப்பான ஜல்லிக்கட்டுக் காளை கொம்பன். பல களம் கண்டு அடங்க மறுத்து திமிறிக் கொண்டு சீறிப் பாய்ந்து மாடு பிடி வீரர்களை மிரட்டி விட்டு வெளியேறி வெற்றி மாலையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேரும்.
அப்படியான வீரன் கொம்பன் கடந்த 11 ந் தேதி தேதி அமைச்சரின் தொகுதியான விராலிமலையில் தமிழகத்திலேயே 6 வாடிவாசல்களைக் கொண்ட தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஜல்லிக்கட்டில் சீறி வந்த வேகத்தில் தடுப்பு மரத்தில் மோதி இறந்தது.
இந்த சம்பவம் நடக்கும் போது சிங்கப்பூரில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் ஊருக்கு வந்ததும் தனது தோட்டத்தில் (புதைக்கப்பட்டுள்ள) விதைக்கப்பட்டுள்ள கொம்பனுக்கு தனது குடும்பத்துடன் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில் கொம்பன் இறப்பை தொடர்ந்து சிறப்பு யாக பூஜைகள் செய்ய வேண்டும் என்று பலரும் சொன்னதால் இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ், புதுக்கோட்டை அ.தி.மு.க ந.செ பாஸ்கர் மற்றும் ர.ர க்கள் கலந்து கொண்ட சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
- இரா.பகத்சிங்