திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி காந்தி மார்க்கெட் பகுதியில் டாக்டர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய காய்கனி விற்பனை வளாகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமை தாங்கினார். விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு ரூ. 21.25 கோடி மதிப்பீட்டிலான கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “முதலமைச்சர் விவசாயப் பெருமக்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளுக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு அவைகளை நிதிநிலை அறிக்கையில் சேர்ப்பதற்காக கருத்துக்கேட்பு கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் முதல்வராக நமது முதல்வர் இருக்கிறார். ஒட்டன்சத்திரம் பகுதி காய்கறி உற்பத்தி அதிகமாக உள்ள பகுதி ஆகும். தினசரி 1000 டன் முதல் 1500 டன் வரை காய்கறி வியாபாரம் நடைபெறுகிறது. மேலும், இப்பகுதியில் காய்கறி விலை குறைவாக உள்ள சமயங்களில் அவற்றைச் சேமித்து வைக்கும் விதமாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்பதனக் கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்தாண்டு 31 கல்லூரிகளை கொண்டு வந்தார்கள். அதில் 4 கல்லூரிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 11 தொழில்நுட்பக் கல்லூரிகளை அறிவித்தார்கள். அதில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 1 கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது தொழிற்பயிற்சி நிலையத்திற்கு என 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்படவுள்ளது. மேலும், ஒட்டன்சத்திரம் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ளது. விருப்பாச்சி பகுதியில் போக்குவரத்து பணிமனை கட்டப்படவுள்ளது.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு என 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு, வரும் 31-ந் தேதி அதற்கான டெண்டர் விடப்படுகிறது. இந்த பணிகள் 15 மாத காலத்திற்குள் முடிவடையும். இதற்கென புதிய 20 மீட்டர் உயரம் கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நமது பகுதி மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்கும். முதலமைச்சர் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு என சிறப்புவாய்ந்த இந்த திட்டத்தை செய்துள்ளார்கள். மேலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 3 இடங்களில் மக்கள் சாலைகளை கடக்க லிப்ட் வசதியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்படும்.
ஒட்டன்சத்திரம் நகராட்சியை குப்பையில்லா நகராட்சியாக மாற்றும் வகையில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு, குப்பைகள் தரம் பிரிக்கப்படவுள்ளது. மேலும், இங்கு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் 12 கோடி ரூபாயில் நடைபாதை பூங்கா அமைக்கப்படவுள்ளது. மேலும், இந்த பகுதியில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானமும் அமைக்கப்படவுள்ளது. முதலமைச்சர் தன்னை முன்னிலைப்படுத்தாமல், தமிழகத்தை முன்மாதிரியாக முன்னிலைப்படுத்தி செயல்பட்டு வருகிறார். ஒட்டன்சத்திரம் பகுதியில் குற்றச்செயல்களை தடுக்க அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 26 பணிகள் 47.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 2451 எல்.இ.டி விளக்குகள் புதிதாக அமைக்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம் அரசு பொது மருத்துவமனைக்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. மார்க்கம்பட்டியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம் பகுதிக்கு என அதிக திட்டங்களை வழங்கி சிறப்பித்து வரும் முதலமைச்சருக்கு நீங்கள் என்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இதில் ஒட்டன்சத்திரம் நகர்மன்றத் தலைவர் திருமலைச்சாமி, நகர்மன்றத் துணைத்தலைவர் வெள்ளைச்சாமி உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.